செப்டம்பர் ஏழாம் தேதி முதல் நான்காம் நிலை தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விளைவாக, கட்டுப்பாட்டு மண்டலங்கள் தவிர மற்ற இடங்களில் திரளான மக்கள் கூடும் வாய்ப்பு உள்ளது. அதனால் கொரோனா வைரஸ்தொற்று அதிகமாகும் அபாயம் உள்ளது. குறிப்பாக சீலிடப்பட்ட ஜன்னல்கள், மூடப்பட்ட கதவுகள், குளிர்பதன முறை கொண்ட மெட்ரோ பயணம் தொற்று பரவலுக்கு உள்ளாகும் என்று தோன்றுகிறது. இதற்கு சீனாவில் நடைபெற்ற ஒரு நிகழ்வை ஆதாரமாக ஒரு ஆய்வு சுட்டிக் காட்டுகிறது. JAMA Internal Medicine என்ற இதழில் வெளியிடப்பட்ட அந்த ஆய்வை சீன நோய் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் மைய மருத்துவர்கள் எழுதியுள்ளனர்.
ஜனவரி மாதம் மூன்றாவது வாரம் கிழக்கு சீனாவின் சீஜியாங் மாகாணத்தில் ஒரு வழிபாட்டு தலத்திற்கு இரண்டு பேருந்துகளில் 128 நபர்கள் பயணம் செய்தனர். இரண்டு பேருந்துகளுமே மறு சுழற்சி முறையில் அமைந்த குளிர்பதன வசதி கொண்டவை. பயண நேரம், சென்று வர மொத்தம் நூறு நிமிடங்கள் ஆகும். இவர்கள் தவிர இன்னொரு 44 நபர்களும் வழிபாட்டில் கலந்து கொண்டனர். வழிபாடு திறந்தவெளியில் நிகழ்ந்தது.
ஒரு பேருந்தில் இருந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்துள்ளது. ஆனால் அறிகுறிகள் இல்லை. அவரிடமிருந்து அந்த பேருந்தில் இருந்த 23பேருக்கு தொற்று பரவியது. மற்றொரு பேருந்தில் இருந்த ஒருவருக்கும் பரவவில்லை. வெளியி
லிருந்து வந்த 44 நபர்களில் வழிபாட்டில் அவருடன் நெருக்கமாக இருந்த ஏழு பேருக்கு மட்டும் பரவியது. தொற்று பரவிய பேருந்தில் சென்றவர்கள் போகும்போதும் திரும்பும்போதும் அவரவர் இருக்கைகளிலேயே அமர்ந்திருந்தனர். பயணத்தின் போதும் வழிபாட்டின் போதும் யாரும் முக கவசம் அணிந்திருக்கவில்லை. குறிப்பிட்ட பயணியின் அருகிலும் பக்கத்து இருக்கைகளிலும் அமர்ந்திருந்தவர்களுக்கும் ஏழு வரிசை தாண்டி கடைசி வரிசையில் அமர்ந்திருந்தவர்களுக்கும் இடையில் தொற்று அபாயம் வேறுபடவில்லை.
இதிலிருந்து அந்த ஆய்வுக் குழு சொல்லும் முடிவுகள்:
1.மறு சுழற்சி குளிர்பதன முறை(ஏசி) கொண்ட பேருந்தில் காற்றின் மூலம் தொற்று பரவியிருக்கலாம்.
2.நெருக்கமாக அமர்ந்திருப்பது, மூச்சின் மூலம் வெளிப்படும் நீர்த் துளிகள் மட்டுமின்றி, காற்றில் மிதந்து செல்லும் ஏரோசால்ஸ் (aerosols) பரவலுக்குக் காரணமாக இருக்கலாம். பெரிய நீர்த் துளிகள் மூலம் மட்டுமல்ல, நீண்ட நேரம் காற்றில் இருக்கும் சிறு துகள்களின் மூலமும் வைரல் பரவும்.
3. பேருந்தில் அவருடன் அமர்ந்து பயணம் செய்த 23 பேருக்கு பரவியது. ஆனால் வழிபாட்டில் அவருடன் நெருக்கமாக இருந்தவர்களில் ஏழு பேருக்கு மட்டுமே பரவியதற்கு அது திறந்த வெளி என்பது காரணமாக இருக்கலாம்.
4. பரவலுக்குக் காரணமான அந்தப் பயணி அறிகுறிகள் இல்லாமல் இருந்தார் என்பதிலிருந்து சாதாரண மூச்சு விடுவதன் மூலமும் வைரசை வெளிவிட முடியலாம்.
ஜூலை 9 அன்று உலக சுகாதார நிறுவனமும்
மூடப்பட்ட அமைப்புகளில் கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவலாம்; அறிகுறிகள் இல்லாதவர்களும் தொற்றை பரப்பலாம் என்பதை அங்கீகரித்துள்ளது.
(இந்து ஆங்கில நாளேட்டில் 06.09.2020 அன்று ஆர்.பிரசாத் எழுதியுள்ள கட்டுரையின் சுருக்கம்.)
====ஆர். ரமணன்===